தொடரை சமன் செய்ய முடியும் என்று நம்புகிறேன் - ஷுப்மன் கில்!
India vs England, 4th Test: அடுத்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய முடியும் என்று நம்புகிறேன் என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
இதில் இந்திய அணி வீரர்கள் கேப்டன் ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதமடித்தும், கேஎல் ராகுல் 90 ரன்களையும் சேர்த்தன் மூலம் கடைசி நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 425 ரன்களைச் சேர்த்தது. இப்போட்டியின் கடைசி நாள் இறுதிவரையிலும் முடிவு எட்டப்படாததன் காரணமாக இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில், “இப்போட்டியில் நாங்கள் பேட்டிங் செய்த விதம் மகிழ்ச்சியளிக்கிறந்து. ஏனெனில் கடந்த சில நாட்களாக நாங்கள் மிகுந்த அழுத்தத்தில் இருந்தோம். மேலும் கடைசி நாள் ஆட்டத்திலும் பந்து சற்று அதிகமாக திரும்பியது. அதனால் ஒவ்வொரு பந்தையும் கவனத்துடன் விளையாடி முடிந்தவரை ஆட்டத்தை நீண்ட நேர எடுத்துச் செல்ல விரும்பினோம். மேலும் அதுகுறித்து நாங்கள் அதிகம் பேசினோம்.
இத்தொடரில் அனைத்து போட்டிகளுமே கடைசி நாள் வரை சென்றுள்ளது. எனவே ஒவ்வொரு போட்டியும் நிறைய பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. ஒரு குழுவாக இது எங்களுக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. அடுத்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய முடியும் என்று நம்புகிறேன். உண்மையைச் சொன்னால், கடந்த காலங்களில் ரன்களை அடித்தது முக்கியமல்ல. நாட்டுக்காக ஒவ்வொரு முறையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது நடுக்கங்கள் இருக்கும்.
இது நாட்டுக்காக விளையாடுவதில் எனக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது, இந்த ஆட்டத்தை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதைக் காட்டுகிறது. நான் ஒவ்வொரு முறை பேட்டிங் செய்யும்போதும், என்னால் முடிந்தவரை சிறப்பாக விளையாட விரும்புகிறேன், மேலும் எனது பேட்டிங்கை முடிந்தவரை ரசிக்க விரும்புகிறேன். முதல் இன்னிங்ஸில், நாங்கள் நல்ல ஸ்கோரைப் பதிவு செய்தோம். ஆனால் யாரேனும் ஒருவர் பெரிய ஸ்கோரை அடித்தால் மட்டுமே போட்டியில் நீடிக்க முடியும்.
Also Read: LIVE Cricket Score
முதல் இன்னிங்ஸில் எங்களுக்கு துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. அந்த தொடக்கங்களை பெரியதாக மாற்ற எங்களால் முடியவில்லை. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் அதைச் செய்ய முடிந்த விதத்தில் மகிழ்ச்சி அடைகிறோம். பும்ரா அடுத்தப் போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து தான் முடிவுசெய்ய வேண்டும். அதேபோல் டாஸைப் பற்றி எனக்கு உண்மையில் கவலையில்லை” என்று தெரிவித்துள்ளார்.