ENG vs NZ, 2nd Test: மிட்செல், பிளெண்டல் அசத்தல்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. லண்டன்ன் லார்ட்ஸில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஜோ ரூட்டின் அபார சதத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து அணி.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று நாட்டிங்காமில் தொடங்கியது. கரோனா காரணமாக இந்த டெஸ்ட்டில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடவில்லை. அதனால் டாம் லேதம் கேப்டன்சி செய்கிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே அணி தான் ஆடும் என்று நேற்றே அறிவிக்கப்பட்டுவிட்டது.
நியூசிலாந்து அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடாததால், அவருக்கு பதிலாக ஹென்ரி நிகோல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அஜாஸ் படேலுக்கு பதிலாக மேட் ஹென்ரியும், காயமடைந்த காலின் டி கிராண்ட் ஹோமுக்கு பதிலாக மைக்கேல் பிரேஸ்வெல்லும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர்.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய கேப்டன் டாம் லேதம் - வில் யங் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் லேதம் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த வில் யங் - டேவன் கான்வே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் யங் 47 ரன்களிலும், டேவன் கான்வே 46 ரன்களிலும் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டனர். பின்னர் களமிறங்கிய ஹென்றி நிக்கோலஸ் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல் - டாம் பிளெண்டல் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 318 ரன்களைச் சேர்த்துள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் டேரில் மிட்செல் 81 ரன்களையும், டாம் பிளெண்டல் 67 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.