5th Test: இங்கிலாந்து அணியில் ஜேமி ஓவர்டனுக்கு இடம்!
ENG vs IND, 5th Test: ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி இரண்டிலும், இந்திய அணி ஒன்றிலும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும்.இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தால் தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2022ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக இங்கிலாந்துக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள அவர் பேட்டிங்கில் 97 ரன்களையும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இதன்மூலம் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனிலும் ஜேமி ஓவர்டன் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் பிரைடன் கார்ஸ், கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளதால், அவர்களுக்கு ஓய்வளித்து ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன் உள்ளிட்டோர் பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இப்போட்டிக்கான இந்திய அணியிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்தவகையில் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்துள்ள ரிஷப் பந்த் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசனுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனிலும் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிரௌலி, லியாம் டௌசன், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஒல்லி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்க், கிறிஸ் வோக்ஸ்.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ், நாராயண் ஜெகதீசன்.