ஐபிஎல் 2022: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கேப்டன் ராகுல்!
கேஎல் ராகுல், தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு யாரால் இதைக் கற்பனை செய்திருக்க முடியும்? 2021இல் இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகளில் விளையாடி 1-3 எனத் தோற்றது. அந்தத் தொடரில் கே.எல். ராகுல் ஒரு டெஸ்டில் கூட விளையாடவில்லை.
இங்கிலாந்தில் இரண்டு வருடங்கள் கழித்து இந்திய அணியில் விளையாட கே.எல். ராகுலுக்கு வாய்ப்பு கிடைத்தது. 4 டெஸ்டுகளில் ஒரு லார்ட்ஸ் சதம், 1 அரை சதம் உள்பட 315 ரன்கள் எடுத்து இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்த முக்கியப் பங்கு வகித்தார். பயிற்சியின்போது மயங்க் அகர்வால் காயமடைந்ததால் முதல் டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு ராகுலுக்குக் கிடைத்தது. அதை அழகாகப் பயன்படுத்திக் கொண்டார்.
இந்தியா அப்போது கடைசியாக விளையாடிய 7 டெஸ்டுகளுக்கு முன்பு ராகுலுக்கு இந்திய அணியில் இடமில்லை. ஆனால் தனக்குக் கிடைத்த 5 டெஸ்டுகளில் திறமையை நிரூபித்ததால் இந்திய டெஸ்ட் அணியில் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ராகுல் தலைமையில் இந்திய அணி விளையாடிய 2-வது டெஸ்டில் தோல்வி தான் கிடைத்தது. காயம் காரணமாக 2-வது டெஸ்டில் விராட் கோலி பங்கேற்கவில்லை. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற நிலையில் நல்ல வாய்ப்பைப் பறிகொடுத்தது இந்தியா. அதேபோல தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடரிலும் கேப்டனாகச் செயல்பட்டார் ராகுல். மூன்று ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி தோற்றது.
இந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ராகுல் அறிவிக்கப்பட்டார். சம்பளமாக ரூ. 17 கோடி என அறிவிக்கப்பட்டது.
லக்னோ அணியின் இந்த முடிவுக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் ஐபிஎல் ஏலத்திலும் லக்னோ அணி தேர்வு செய்த வீரர்கள் பலருக்கும் அதிருப்தியை அளித்தது.
கேப்டன் பதவிக்கு ராகுல் பொருத்தமில்லாதவர், இவரை வைத்துக்கொண்டு லக்னோ அணி என்ன செய்யப் போகிறது, தேர்வு செய்த வீரர்களும் சரியில்லை எனப் பலவிதமாக விமர்சனங்கள் எழுந்தன.
அதேபோல குஜராத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் லக்னெள அணி தோற்றது. விமர்சனங்கள் இன்னும் அதிகமாகின. இந்தமுறை கடைசி இடத்தைப் பிடிக்கப் போகும் அணி லக்னோ தான், ராகுலை நம்பி ஏமாறப் போகிறது எனக் கிண்டல்கள் அதிகமாகின.
ஆனால் அடுத்த இரு ஆட்டங்களிலும் எல்லோரையும் மிரள வைத்துவிட்டது லக்னோ அணி. ஜெயிக்க முடியாத இரு ஆட்டங்களிலும் எப்படியோ சாதுர்யமாக விளையாடி வெற்றியைத் தன் பக்கம் வரவைத்துவிட்டது.
சிஎஸ்கேவுக்கு எதிரான 2ஆவது ஆட்டத்தில் 211 ரன்கள் என்கிற கடினமான இலக்கை அற்புதமாக விரட்டினார்கள் லக்னோ அணி பேட்டர்கள். ஆயுஷ் பதோனியை நம்பி ராகுல் நல்ல வாய்ப்புகளை வழங்கினார். பதோனியும் அருமையாகப் பயன்படுத்தி அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
நேற்று, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு அணிகளும் கத்தி மேல் நடக்கவேண்டிய சூழல்கள் அமைந்தன.
கடைசியில் சன்ரைசர்ஸின் வெற்றிக்கு 17 பந்துகளில் 27 ரன்கள் தேவை. கைவசம் 6 விக்கெட்டுகள், களத்தில் இரு நல்ல பேட்டர்கள் இருந்தார்கள். இதனால் சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றி உறுதி எனப் பலரும் நம்பினார்கள். ஆனால் அவேஷ் கான் அற்புதமாகப் பந்துவீசி அந்த ஓவரில் இரு விக்கெட்டுகளை எடுத்தார். கடைசி ஓவரை வீசிய ஹோல்டர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
பதற்றமான நிலையிலும் பந்துவீச்சாளர்களைச் சரியாகப் பயன்படுத்தினார் ராகுல். இறுதியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
பலரும் நினைத்தது போல, தான் ஒரு மோசமான கேப்டன் இல்லை என்பதை கடந்த இரு ஆட்டங்களிலும் நிரூபித்துவிட்டார் ராகுல். 3 ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் நெட்ரன்ரேட்டின் அடிப்படையில் 4 புள்ளிகளைக் கொண்டு 5ஆம் இடத்தில் உள்ளது லக்னோ அணி. இதுவரை வேறு எந்த அணியும் லக்னோவை விடவும் அதிகப் புள்ளிகளைப் பெறவில்லை.
ஐபிஎல் போட்டியில் தனது தலைமைப் பண்பை மெல்ல மெல்ல நிரூபித்து வருகிறார் ராகுல். விமர்சனங்கள் அவரை மெருகேற்றியிருக்கலாம். அல்லது அவர் அதைப் பொருட்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம், அடுத்தடுத்த வெற்றிகளால் ஒரு நல்ல கேப்டனாக ராகுல் மாறி வருகிறார்.