ஒரு ஓவரை வைத்து மட்டும் அவரை எடைப்போடக்கூடாது - டேனீஷ் கனேரியா!

Updated: Tue, Jun 28 2022 13:53 IST
Former Pakistan Spinner Danish Kaneria On Umran Malik’s Debut Performance (Image Source: Google)

ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட மற்றொரு அணி தற்போது அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 

இந்த தொடரில் முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே விளையாடி வருவதால் இந்த தொடரின் மீதான சுவாரசியம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதோடு ஐபிஎல் தொடரில் கலக்கிய பல இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடரானது பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அயர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. 

இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடும் அறிமுக வாய்ப்பினைப் பெற்ற உம்ரான் மாலிக் ஒரு ஓவர் மட்டுமே வீசி 14 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதன் காரணமாக கேப்டன் பாண்டியா அவருக்கு தொடர்ந்து பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை.

இந்நிலையில் இரண்டாவது போட்டியிலாவது அவருக்கு முழு ஓவர்களையும் வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குவிந்து வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியாவும் உம்ரான் மாலிக்கிற்கு ஆதரவாக சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “உம்ரான் மாலிக் தனது வாய்ப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறார். அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் ஒரு ஓவர் மட்டுமே வீசி 14 ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் அவரது திறமையை சாதாரணமாக எடை போடக்கூடாது. ஏனெனில் மின்னல் வேகத்தில் பந்து வீசும் அவர் சர்வதேச கிரிக்கெட்டிற்கு தற்போது தயாராகி வருகிறார். எனவே அந்த ஒரு ஓவரை மட்டும் வைத்து அவரை எடை போடக்கூடாது.

மேலும் எந்தவொரு வீரரையும் ஒரு போட்டியை மட்டும் வைத்து எடை போடக்கூடாது அதிலும் குறிப்பாக உம்ரான் மாலிக் போன்ற அற்புதமான வீரரின் திறமையை ஒரு ஓவரை மட்டுமே வைத்து எடை போடக்கூடாது. இனி வரும் போட்டிகளில் அவர் தனது அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்துவார்” என உம்ரான் மாலிக்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை