அவரை டி 20 உலகக்கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் - பிரசித் கிருஷ்ணா
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி நாளை (பிப்ரவரி 11) அகமதாபாத்தில் நடக்கவுள்ளது.
2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்து, ஆட்டநாயகன் விருதை வென்றவர் ஃபாஸ்ட் பவுலர் பிரசித் கிருஷ்ணா. அவர் வீசிய 9 ஓவர்களில் 3 மெய்டன் ஓவர்களை வீசி, 9 ஓவர்களில் மொத்தமாக வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக திகழ்ந்தார் பிரசித் கிருஷ்ணா.
ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக அபாரமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்த பிரசித் கிருஷ்ணாவுக்கு இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டார். ஐபிஎல்லில் 34 போட்டிகளில் ஆடி 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பிரசித் கிருஷ்ணா.
அவரது பவுலிங்கில் கவரப்பட்டவர்களில் ஒருவரான முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானான ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணாவை டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், “பிரசித் கிருஷ்ணா அவரது திறமையை 2ஆவது ஒருநாள் போட்டியில் காட்டிவிட்டார். அவர் இனிமேல் டெஸ்ட் அணியிலும் இடம்பிடிப்பார் என நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பைக்கான அணியில் கண்டிப்பாக அவரை எடுக்க வேண்டும். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு ஏற்ற, நன்கு பவுன்ஸாகும் ஆடுகளங்கள். எனவே அந்த ஆடுகளங்களில் கண்டிப்பாக பிரசித் கிருஷ்ணா பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதால் அவரை அணியில் சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.