எங்கள் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன் - சஞ்சு சாம்சன்!

Updated: Mon, May 30 2022 11:39 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியிடம் ராஜஸ்தான் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் பட்லரை தவிர்த்து வேறு யாரும் சோபிக்கவில்லை. யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 22 ரன்கள், சஞ்சு சாம்சன் 14 ரன்கள், தேவ்தத் பட்டிக்கல் 2 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர். நம்பிக்கை நாயகனான ஜாஸ் பட்லர் 35 பந்துகளில் 39 ரன்களை அடித்து அவுட்டானார். இதனால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்களை இழந்து 130 ரன்களை மட்டுமே அடித்தது.

இதன்பின்னர் ஆடிய குஜராத் அணி ஓப்பனிங்கே அதிர்ச்சி தான். தொடக்க வீரர் விருதிமான் சாஹா 5 ரன்களுக்கு வெளியேறினார். இதன்பின் வந்த மேத்யூவ் வெட் 8 ரன்களுக்கு அவுட்டானார். இதனால் குஜராத் அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (34 ) - சுப்மன் கில் (45) என சேர்த்தனர்.

கடைசி நேரத்தில் சீனியர் வீரர் டேவிட் மில்லர் 19 பந்துகளில் 32 ரன்களை விளாசி, குஜராத் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 133 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 15வது சீசன் ஐபிஎல்-ன் சாம்பியன் பட்டம் வென்று குஜராத் அணி அசத்தியது. 13 வருடங்களுக்கு பிறகு கோப்பை வெல்ல வேண்டும் என்ற ராஜஸ்தான் அணியின் கனவு தகர்ந்தது.

இந்நிலையில் தோல்வியடைந்தது குறித்து சஞ்சு சாம்சன் பேசினார். “இந்த சீசன் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. கடந்த 2 -3 சீசன்களாக எங்கள் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமானதாக இருந்தது. அவர்களுக்கு மகிழ்ச்சி தருணத்தை தற்போது கொடுத்துள்ளோம். இன்றைய நாள் எங்களுடையது அல்ல என்று தான் நினைக்க வேண்டும்.

அணியில் சிறந்த இளைஞர்கள் மற்றும் சிறந்த சீனியர்கள் கலந்து இருந்ததால் முன்னேற முடிந்தது. மெகா ஏலத்தில் இருந்தே எங்கள் அணியில் தரமான பவுலர்கள் இருக்க வேண்டும் என நினைத்தோம். ஏனென்றால் அவர்கள் தான் தொடரை வெல்ல உதவுவார்கள். அந்த வகையில் எங்கள் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை