டி20 கிரிக்கெட்டில் பாபர் ஆசம் ஒன்றும் ஆபத்தான வீரர் கிடையாது - உஸ்மான் ஷின்வாரி!

Updated: Sun, Aug 13 2023 17:18 IST
Image Source: Google

தற்போது உலகக் கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் நால்வரும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள். இந்த தசாப்தத்தில், இந்த நான்கு சிறந்த பேட்ஸ்மேன்களோடு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனாக இருக்கும் பாபர் ஆசமையும் இணைத்து சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் இடத்தில் இருந்த அரிய பேட்ஸ்மேன் விராட் கோலி. டி20 கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் நம்பர் ஒன் வீரராக இருந்த சாதனை அவரிடம்தான் இருந்தது. அதை பாபர் ஆசம் முறியடித்து ஆயிரம் நாட்களுக்கு மேல் அதில் தொடர்ந்து வந்தார். தற்பொழுது சூரியகுமார் யாதவ் அதை உடைத்து டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

பாபர் ஆசம் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் நல்ல ஆவரேஜ் கொண்டுள்ள பேட்ஸ்மேனாக இருக்கிறார். ஆனால் அவரது ஸ்ட்ரைக் ரேட் சிறப்பாக இல்லை. அதாவது அவர் எல்லா ஆட்டத்திலும் நல்ல ரன்களை சீராகக் கொண்டு வருகிறார். அதே சமயத்தில் அந்த ரன்கள் வேகமாக வருவதில்லை. இது அவரின் பலவீனமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இவருடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் முகமது ரிஸ்வான் பேட்டிங் ஸ்டைலும் இவரைப்போலவே இருக்கிறது. அவரும் நல்ல ஆவரேஜ் வைத்திருக்கிறார், ஆனால் நல்ல ஸ்ட்ரைக் ரேட் கிடையாது. 

தற்பொழுது பாபர் ஆஸமின் இந்த பலவீனம் குறித்து பாகிஸ்தான் அணியின் 29 வயதான இடதுகை வேகப்பந்துவீச்சாளர் உஸ்மான் கான் ஷின்வாரி வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “எனது விருப்பத்திற்குரிய வீரர் பாபர் ஆசம். ஆனால் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில்தான் ஆபத்தான பேட்ஸ்மேனாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். டி20 கிரிக்கெட்டில் அவர் வழக்கமான ஷாட்களை மட்டுமே நம்பி இருப்பதால், ஒரு பந்துவீச்சாளராக நான் அவருக்கு எதிராக பெரிய அழுத்தத்தை உணர மாட்டேன்.

பாபர் ஒரு குட் லென்த் டெலிவரியை ஸ்லாக் ஸ்வீப் செய்ய மாட்டார். அதை சிக்ஸருக்கு அடிக்க மாட்டார். நான் இதெல்லாம் அவர் செய்ய மாட்டார் என்று நினைக்கும் பொழுது அவரால் எனக்கு எதிராக அழுத்தத்தை உண்டாக்க முடியாது. இந்த காரணத்திற்காக டி20 கிரிக்கெட்டில் நான் அவரிடமிருந்து எந்த ஒரு ஆபத்தையும் உணர மாட்டேன். ஆனால் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆபத்தான பேட்ஸ்மேன். எனக்கு மிகவும் பிடித்தமான வீரர்” என்று கூறியிருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை