'நான் வித்தியாசமானவன்' - சஞ்சு சாம்சன்!

Updated: Tue, May 31 2022 18:12 IST
‘I’m different from Dravid and Dhoni or anyone else'- Sanju Samson (Image Source: Google)

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரானது நேற்று முன்தினம் மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து குஜராத் அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 130 ரன்களை மட்டுமே அடித்தது.

அதனைத் தொடர்ந்து 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது சுப்மன் கில், பாண்டியா மற்றும் மில்லர் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 133 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த இறுதிப் போட்டியில் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய பாண்டியா, பேட்டிங்கிலும் 34 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு அறிமுகமான குஜராத் அணி தங்களது அறிமுக தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனையும் படைத்தது.அதேசமயம் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி இந்த முறை ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்றது. இறுதிப்போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வியுற்றது. 

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன்  இந்தத் தொடரில் 458 ரன்கள் 147 ஸ்டிரைக்ரேட்டுடன் விளையாடினார். ஆனால், முக்கியமான நேரத்தில் அவர் சரியாக ஆடவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதுகுறித்து மௌனம் கலைத்துள்ள சஞ்சு சாம்சன், “நான் ராகுல் திராவிட் மாதிரியோ, தோனி மாதிரியோ அல்லது வேறு யாரு மாதிரியும் இல்லை, வித்தியாசமானவன். நான் இயற்கையாக இருக்க விரும்புகிறேன். முதலில், அணியின் மனநிலையை கணிப்பேன். சில நேரங்களில் அவர்கள் கொதிப்படைந்து காணப்படுவார்கள். 

அவர்களிடம் சென்று நீங்கள் உங்கள் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று கூற முடியாது. சில நேரங்களில் எல்லோருமே தங்களது சிறப்பான திறைமைகளை வெளிக்கொணருங்கள் என சொல்லுவது முட்டாள்தனமாக இருக்கும். ராகுல் திராவிட் இளைஞர்களை உற்சாகப்படுத்துவார். 

அவர் அன்பாகவும் புரிந்துக் கொள்பவராகவும் இருப்பார். அதுதான் எங்களைச் சிறப்பாக விளையாட வைத்தது. நாங்களும் அதைத்தான் ராஜஸ்தான் அணியில் செயல்பட முயற்சிக்கிறோம்” என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை