T20I: வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்று சம நிலையில் உள்ளன.
இந்நிலையில், டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது டி20 போட்டி நாளை இரவு 7 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணி
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இத்தொடரின் முதல் மற்றும் மூன்றாவது போட்டிகளில் தோல்வியைத் தழுவினாலும் இரண்டாவது மற்றும் நான்காவது போட்டிகளில் வெற்றியை ஈட்டி தொடரை தக்கவைத்துள்ளது.
அதிலும் இந்தத் தொடரில் அறிமுக வீரர்களாகக் களமிறங்கிய இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அபாரமான ஆட்டம் இந்திய அணிக்குப் பெரும் வலுவைச் சேர்த்து எதிரணிக்கு மிரட்டல் விடுக்கிறது. அதேபோல் முதல் இரண்டு போட்டிகளாகக் களமிறங்காமல் இருந்த அதிரடி வீரர் ரோஹித் சர்மாவும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருகிறார்.
ரன் மெஷின் விராட் கோலி, கன்சிஸ்டன்சி ஸ்ரேயாஸ், கேமியோ பந்த், பாண்டியா என பேட்டிங்கில் அசுரபலத்தை வெளிப்படுத்திவரும் இந்திய அணிக்கு, பந்துவீச்சு தரப்பில் பும்ரா, ஷமி இல்லாதது சற்று பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது.அதே சமயம் கடந்த சில போட்டிகளில் யுஸ்வேந்திர சஹால், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது ஓவர்களை இங்கிலாந்து வீரர்கள் வெளுத்துவாங்குவதும் ஒரு காரணம்.
அணியின் பேட்டிங்கிற்கு ஏற்றவாறு பந்துவீச்சாளர்கள் இல்லாததே இந்திய அணி அடைந்த தோல்விகளுக்கு காரணம் என வல்லுநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இவை அனைத்தையும் சரிசெய்து, கடைசி டி20 போட்டியை இந்திய அணி வெல்வது என்பது சவாலான காரியம் என்றே ரசிகர்களின் சிந்தனையாகவும் உள்ளது. இதற்கான பதில் நாளைய போட்டியின் முடிவிலேயே தெரியவரும்.
இங்கிலாந்து அணி
இங்கிலாந்துடெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த நிலையில், டி20 தொடரை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் போட்டியே பெரும் வெற்றியாக அமைந்திருந்தது. ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் வீரர்களின் ஒரு சில தவறுகள் அணியின் தோல்விக்கு வித்திட்டது.
இருப்பினும் பட்லர், ராய், பேர்ஸ்டோவ், மோர்கன், ஸ்டோக்ஸ் என அனைவரும் உச்சகட்ட ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு தலைவலியை கொடுக்கும் விஷயமாகவே அமைந்துள்ளது. அதற்கேற்றாற்போல், வேகப்பந்துவீச்சில் 150+ பந்துவீச்சாளர்களான ஆர்ச்சர், மார்க் வுட் என தங்களது அசுரவேக பந்துவீச்சால் இந்திய அணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காடச் செய்துவருகின்றனர்.
அதேபோல், சாம் கரன், ஸ்டோக்ஸ் எனக் கூடுதல் பந்துவீச்சாளர்களை வைத்துள்ள இங்கிலாந்து அணி பெரும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், நாளைய போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே ஐசிசி டி20 தரவரிசையில் இங்கிலாந்து அணியால் தொடர்ந்து முதலிடம் வகிக்க முடியும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது.
இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ராகுல் சஹார், ஷர்துல் தாக்கூர்.
இங்கிலாந்து அணி: இயான் மோர்கன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், டேவிட் மாலன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், கிறிஸ் ஜோர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷித், மார்க் வுட்.