ஐசிசி தரவரிசை: ஹர்திக், புவனேஷ்வர் முன்னேற்றம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட புவனேஷ்வர் குமார்,
கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக்
காரணமானார்.
இந்நிலையில் ஐசிசி சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை
வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் புவனேஷ்வர் குமார் 9
இடங்கள் நகர்ந்து, 11ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அதேபோல் மற்றோரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் தரவரிசையில் 93ஆவது
இடத்திலிருந்து 80ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
நியூஸிலாந்து, வங்கதேசம், இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள்
தொடர் முடிவில் பல்வேறு மாற்றங்கள் தரவரிசையில் ஏற்பட்டுள்ளன.
இந்திய வீரர் கே.எல்.ராகுல் இங்கிலாந்துக்கு எதிராக சதம், அரை சதம் அடித்ததையடுத்து,
பேட்ஸ்மேன் தரவரிசையில் 31ஆவது இடத்திலிருந்து 27ஆவது இடத்துக்கும், ஹர்திக் பாண்டியா
42ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளனர். மேலும் ரிஷப் பந்த் டாப் 100 தரவரிசைக்குள்
நுழைந்துள்ளார்.
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 295 புள்ளிகளுடன் 4 இடங்கள் நகர்ந்து 2ஆவது
இடத்துக்கு முன்னேறியுள்ளார். பேட்ஸ்மேன்கள் வரிசையில் இங்கிலாந்து வீரர் ஜானி
பேர்ஸ்டோ 796 புள்ளிகளுடன் தொடர்ந்து 7ஆவது இடத்தில் நீடிக்கிறார். மொயின் அலி, 9
இடங்கள் நகர்ந்து, 46-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
நியூஸிலாந்து பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 691 புள்ளிகளுடன் 3ஆவது இடத்துக்கும், 690
புள்ளிகளுடன் இருந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4ஆவது இடத்துக்குத்
தள்ளப்பட்டுள்ளார்.