IND vs SA, 4th T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இந்தியா!

Updated: Fri, Jun 17 2022 22:28 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் நான்காவது போட்டி ராஜ்கோட்டில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா, பவுலிங் தேர்வு செய்தார். அதனால் இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணிக்கு பேட்டிங்கில் எதிர்பார்த்த சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. அணி 81 ரன்கள் எடுத்த போது ருதுராஜ், ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், பந்த் என டாப் நான்கு பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி இருந்தனர். இதில் கிஷன் மட்டுமே 27 ரன்கள் எடுத்து ஆறுதல் கொடுத்தார்.

பின்னர் ஐந்தாவது விக்கெட்டிற்கு ஹர்திக் பாண்டியா - தினேஷ் கார்த்திக் இணைந்தனர். இருவரும் 33 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தனர். பாண்டியா 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்திருந்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி இங்கிடி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா 8 ரன்கள் எடுத்த நிலையில், காயம் காரணமாக ரிட்டையர்ஹர்ட் முறையில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து குயின்டன் டி காக் 14 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் களமிறக்கிய டுவைன் பிரிட்டோரியஸ், ரஸ்ஸி வெண்டர் டுசென், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து களமிறங்கிய வீரர்களும் ஆவேஷ் கானின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் 16.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், 2-2 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன் செய்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை