IND vs WI, 2nd ODI: இந்தியாவை 237 ரன்களில் கட்டுப்படுத்தியது வெஸ்ட் இண்டீஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இப்போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரோஹித் சர்மாவுடன், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் இக்கூட்டணி இந்திய அணிக்கு பெரிதளவில் பலனளிக்கவில்லை.
இதில் ரோஹித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்த், விராட் கோலி ஆகியோர் தலா 18 ரன்களில் ஓடியன் ஸ்மித் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - சூர்யகுமார் யாதவ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் கேஎல் ராகுல் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்ப நிலையில் 49 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டானார். இருப்பினும் மறுமுனையிலிருந்த சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்தார்.
பின் அவரும் 64 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 28 ரன்களோடு வெளியேறினார். இறுதியில் அதிரடியாக விளையாட முயற்சித்த தீபக் ஹூடாவும் 29 ரன்களோடு ஆட்டமிழந்தார்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப், ஓடியன் ஸ்மித் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.