ZIM vs IND: ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய இந்தியா!
இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து ஃபார்மட்டிலும் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்துவருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வெற்றிகளை குவித்து சாதனை படைத்துவருகிறது.
அந்தவகையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றிக்கு பிறகு அபாரமான சாதனை படைத்துள்ளது இந்திய அணி. ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றது.
இன்று ஹராரேவில் நடந்த 2ஆவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி, ஒருநாள் கிரிக்கெட்டில் ஹராரேவில் தொடர்ச்சியாக இந்திய அணியின் 11ஆவது வெற்றி. இதன்மூலம் வெளிநாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஒரு அணி பெற்ற அதிகபட்ச வெற்றி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது இந்திய அணி.
இதற்கு முன் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்க அணிகள் வெளிநாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ச்சியாக ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 10 வெற்றிகளுடன் சாதனையை தன்னகத்தே கொண்டிருந்தன. இப்போது அந்த சாதனையை இந்திய அணி முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பாகிஸ்தான் அணி 1989-1990 காலக்கட்டத்தில் ஷார்ஜாவில் தொடர்ச்சியாக 10 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி 2013-2017 காலக்கட்டத்தில் கிழக்கு லண்டனிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 1992-2001இல் பிரிஸ்பேனிலும் தொடர்ச்சியாக 10 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தன.
இந்நிலையில் தற்போது இந்திய அணி 2013 முதல் ஹராரேவில் தொடர்ச்சியாக 11 வெற்றிகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.