அடுத்த ஐபிஎல் சீசனை ஐபிஎல்லை வேற லெவல்ல நடத்துறோம் - ஜெய் ஷா!
இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போல உலகம் முழுதும் கிரிக்கெட் விளையாடும் பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர் நடத்தப்படுகிறது. ஆனால் அவையனைத்தையும் விட, ஐபிஎல் தான் அதிகமான பணம் புழங்கும், மிகப்பெரிய, தரமான டி20 லீக் தொடர்.
அதனால் தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் என அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல்லில் ஆட விரும்புகின்றனர்.
கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டுவரும் ஐபிஎல் தொடரில் இதுவரை 14 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 அணிகள் மட்டுமே ஐபிஎல்லில் விளையாடி வந்த நிலையில், அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகளுடன் நடத்தப்படவுள்ளது.
இதன்மூலம் ஐபிஎல் தொடரில் இன்னும் நிறைய போட்டிகள் நடப்பதுடன், பிசிசிஐக்கு கூடுதல் வருவாயையும் ஈட்டித்தரும். 14ஆவது சீசன் கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடும் சவால்களை எதிர்கொண்டு, 2 பாதிகளாக இந்தியாவிலும் அமீரகத்திலும் நடத்தப்பட்டு, வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கிறது.
Also Read: T20 World Cup 2021
ஐபிஎல் 14வது சீசனை பல சவால்களை கடந்து முடித்துவிட்ட நிலையில், அடுத்த சீசனை இன்னும் பெரிதாகவும் சிறப்பாகவும் நடத்துவோம் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த சீசனை இந்தியாவில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் தெரிவித்திருந்தார்.