தொடரிலிருந்து முழுவதுமாக விலகிய சஹார்; கேகேஆர் அணியிலிருந்து ராஷிக் இஸ்லாம் விலகல்!
சிஎஸ்கே அணிக்காக தீபக் சஹார் 2018 முதல் விளையாடி வருகிறார். 58 ஆட்டங்களில் 58 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவற்றில் 42 விக்கெட்டுகளை பவர்பிளே ஓவர்களில் எடுத்துள்ளதால் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக உள்ளார். இதன்காரணமாக ஐபிஎல் ஏலத்தில் தீபக் சஹாரை ரூ. 14 கோடிக்கு சிஎஸ்கே அணி தேர்வு செய்தது.
இதனிடையே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் தீபக் சஹாரின் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெறுவதற்காக பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமிக்குச் சென்றார். எனவே, நடப்பு ஐபிஎல் போட்டியின் இறுதிக்கட்டத்தில் சிஎஸ்கே அணியினருடன் தீபக் சஹார் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் காயம் காரணமாக தீபக் சஹார் ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ராஷிக் சலாம் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார். அவருக்கு மாற்று வீரராக ஹர்ஷித் ரானா கேகேஆர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.