ஐபிஎல் 2022: கேகேஆரை பந்தாடி வெற்றியைப் பறித்தது குஜராத்!
கொல்கத்தா - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெற்று வருகிறது. குஜராத் அணி இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 7 ஆட்டங்களில் 3-ல் மட்டும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது.
டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக அதாவது 34 ஆட்டங்களுக்குப் பிறகு ஒரு கேப்டன் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். பகல் ஆட்டம் என்பதால் பனிப்பொழிவு பிரச்னை இருக்காது என்கிற காரணத்தால் இந்த முடிவை அவர் எடுத்தார்.
அதன்படி களமிறங்கிய ஷுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழக்க 3-ம் நிலை வீரராக பவர்பிளேயில் களமிறங்கி ஆச்சர்யப்படுத்தினார் கேப்டன் பாண்டியா. முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது குஜராத். 10 ஓவர்கள் வரைக்கும் பாண்டியாவும் சஹாவும் நன்கு விளையாடி ஸ்கோரை 1 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் என உயர்த்தினார்கள். பிறகு சஹா 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
16 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது குஜராத். இதனால் கடைசி 4 ஓவர்களில் அதிரடியாக விளையாடினால் 180-190 ரன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பாண்டியாவுடன் 50 ரன்கள் கூட்டணி அமைத்த மில்லர், பிறகு 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். செளதி வீசிய 18ஆவது ஓவரில் பாண்டியா 67 ரன்களுக்கும் ரஷித் கான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள்.
இதனால் நெருக்கடியை எதிர்கொண்டது குஜராத் அணி. கடைசி ஓவரை வீசிய ரஸ்ஸல் 5 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கடைசி 17 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்ததால் குஜராத் அணியால் எதிர்பார்த்தபடி அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போனது.
குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. ரஸ்ஸல் 4, செளதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
அதன்பின் இலக்கை துரத்திய கேகேஆர் அணியில் சுனில் நரைன், சாம் பில்லிங்ஸ், ஸ்ரேயாஸ் ஐயர், நிதீஷ் ராணா என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் களமிறங்கிய ரிங்கு சிங் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 35 ரன்னில் ரிங்கு சிங்க்கும், 2 ரன்களில் ஷிவம் மாவியும் விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அண்ட்ரே ரஸ்ஸல் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதனால் கடைசி ஓவரில் கேகேஆர் அணி வெற்றிபெற 18 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
அந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட ரஸ்ஸல், இரண்டாவது பந்தையும் சிக்சர் விளாச முயற்சித்து விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.