சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் ஆண்ட்ரே ரஸல்!
WI vs AUS, 2nd T20I: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியுடன் வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரண்டான் கிங் 51 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஷ் இங்கிலிஸ் 78 ரன்களையும், கேமரூன் க்ரீன் 56 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 15.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றுள்ளார். அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன ஆண்ட்ரே ரஸல், இந்தப் போட்டியிலும் தனது அதிரடியை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அதன்படி இப்போட்டியில் 15 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் விளாசி தனது விக்கெட்டை இழந்திருந்தார்.
இந்நிலையில் தனது ஓய்வு குறித்து பேசிய அவர், “இங்கு கூடியுள்ள ரசிகர்களுக்கும், எனக்கு வாய்ப்பு அளித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். சொந்த ஊர் மக்கள் முன்னிலையில் விளையாடுவதில் மகிழ்ச்சி, முடிவு எங்கள் வழியில் செல்லவில்லை, ஆனால் இவ்வளவு போட்டிகளில் விளையாடியதில் மகிழ்ச்சி, அணி சிறப்பாக முன்னேற வாழ்த்துகிறேன். என்ககு வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
தற்போது 37 வயதாகும் ஆண்ட்ரே ரஸல் இதுவரை ஒரு டெஸ்ட், 56 ஒருநாள் மற்றும் 84 டி20 போட்டிகளில் விளையாடி 7 அரைசதங்களுடன் 2ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும், 132 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆண்ட்ரே ரஸல் ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், ஐபிஎல், பிபில் போன்று டி20 லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.