சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஆண்ட்ரே ரஸல்!
Andre Russell Retirement: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த கையோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வெஸ்ட் இண்டீஸின் ஆண்ட்ரே ரஸல் ஓய்வு பெறவுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆண்ட்ரே ரஸல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு டி20 போட்டிகளுடன் ஆண்ட்ரே ரஸல் ஓய்வு பெற முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய அவர், “இதன் அர்த்தத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. வெஸ்ட் இண்டிஸை பிரதிநிதித்துவப்படுத்துவது என் வாழ்க்கையில் மிகவும் பெருமையான சாதனைகளில் ஒன்றாகும். நான் சிறுவனாக இருந்தபோது, இந்த நிலைக்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை.
ஆனால் நீங்கள் எவ்வளவு அதிகமாக விளையாடத் தொடங்கி விளையாட்டை நேசிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் என்ன சாதிக்க முடியும் என்பதை உணருவீர்கள். இது என்னை சிறந்தவராக மாற்றத் தூண்டியது, ஏனென்றால் மெரூன் நிறங்களில் ஒரு அடையாளத்தை விட்டுச் சென்று மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாக மாற விரும்பினேன். கரீபியனில் இருந்து வெளிவரும் அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் அதே வேளையில், எனது சர்வதேச வாழ்க்கையை சிறப்பாக முடிக்க விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமான ஆண்ட்ரே ரஸல் இதுவரை ஒரு டெஸ்ட், 56 ஒருநாள் மற்றும் 84 டி20 போட்டிகளில் விளையாடி 7 அரைசதங்களுடன் 2ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும், 132 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். தற்போது ரஸல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தாலும், டி20 லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, ஜெடியா பிளேட்ஸ், ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹோசின், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி, ரோவ்மேன் பவல், ஆண்ட்ரே ரஸல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு, ரொமாரியோ ஷெப்பர்ட்.
Also Read: LIVE Cricket Score