ஐபிஎல் 2022: ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் குஜராத் டைட்டன்ஸும் ஆடிவருகின்றன. இதற்கு முன் ஆடிய 4 போட்டிகளில் இரு அணிகளுமே தலா 3 வெற்றிகளை பெற்றிருந்த நிலையில், 4ஆவது வெற்றியை பெறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன.
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் அதிரடியாக தொடங்கினார். 6 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் அடித்த வேட் 2வது ஓவரில் ரன் அவுட்டானார். 3ஆம் வரிசையில் இறங்கிய விஜய் சங்கர் 7 பந்தில் 2 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில்லும் 13 ரன்களுக்கு நடையை கட்டினார்.
53 ரன்களுக்கு குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், அபினவ் மனோகரும் இணைந்து அடித்து ஆடினர். 4வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 86 ரன்களை சேர்த்தனர். 28 பந்தில் 43 ரன்கள் அடித்து அபினவ் மனோகர் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்ததுடன், கடைசி வரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார்.
ஹர்திக் பாண்டியாவின் பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 192 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 193 ரன்கள் என்ற கடினமான இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியில் தேவ்தத் படிக்கல் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் யாரும் எதிர்பாராத வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3ஆம் வரிசையில் களமிறங்கினார்.
மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் மைதானத்தின் அனைத்து திசையிலும் பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினார். இதன்மூலம் 23 பந்துகளில் அரைசதத்தையும் பதிவுசெய்தார்.
இதற்கிடையில் அஸ்வின் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் ஜோஸ் பட்லரும் லோக்கி ஃபர்குசனிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 11, வெண்டர் டூசென் 6, ஷிம்ரான் ஹெட்மையர் 29, ரியான் பராக் 18 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் ராஜஸ்தான் அணியின் வெற்றிவாய்ப்பும் குறைந்தது. அதன்பின் 17 ரன்களில் ஜிம்மி நீஷமும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த வீரர்களும் சோபிக்க தவறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறியது.