ஐபிஎல் 2022: லிவிங்ஸ்டோன் காட்டடி; குஜராத்திற்கு 190 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியில் இம்முறையும் மயங்க் அகர்வால் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து அறிமுக ஆட்டத்தில் விளையாடிய ஜானி பேர்ஸ்டோவும் 8 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய லியாம்லிவிங்ஸ்டோன் வழக்கம் போல் அதிரடியில் மிரட்டினார். இதன்மூலம் 21 பந்துகளில் அரைசதம் அடித்தும் அசத்தினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஷிகர் தவான் 35 ரன்களுடன் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பின் 64 ரன்களில் லிவிங்ஸ்டோனும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜித்தேஸ் சர்மா 23, ஓடியன் ஸ்மித் 0, ஷாருக் கான் 15, ரபாடா 1 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இருப்பினும் கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ராகுல் சஹார், அந்த ஓவரில் 16 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களைச் சேர்த்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், தர்ஷன் நல்கண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.