ஐபிஎல் 2022: சூர்யகுமார், திலக் வர்மா அதிரடி; கேகேஆருக்கு 162 இலக்கு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் தொடக்கம் முதலே ரன் குவிக்க தடுமாறி வரும் ரோஹித் சர்மா 3 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அறிமுக போட்டியில் களமிறங்கிய டெவால்ட் ப்ரீவிஸ் அதிரடியாக விளையாடி கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வந்த ப்ரீவிஸ் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 14 ரன்களில் இஷான் கிஷானும் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணை முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
பின் 16ஆவது ஓவரின் தொடக்கம் முதல் இந்த இணை அதிரடியாக விளையாடத் தொடங்கி, பவுண்டரிகளை பறக்கவிட்டனர். இதில் 34 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசி அசத்தினார்.
அதன்பின் 52 ரன்கள் எடுத்திருந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் பொல்லார்ட் சில பவுண்டரிகளை விளாசினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 38 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார்.