ஐபிஎல் 2022: ஆர்சிபியை பந்தாடி அபார வெற்றியைப் பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்!

Updated: Tue, Apr 26 2022 23:18 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை  தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் 7 ரன்னில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய அஷ்வின், 9 பந்தில் 17 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். செம ஃபார்மில் இருக்கும் ஜோஸ் பட்லரை 8 ரன்னில் ஜோஷ் ஹேசில்வுட் வீழ்த்தினார்.

சாம்சன் (27), டேரைல் மிட்செல் (16), ஹெட்மயர்(3) ஆகியோரும் சோபிக்காமல் போக, ஒருமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடிய ரியான் பராக், கடைசி 2 ஓவர்களில் பவுண்டரிகள், சிக்ஸர் விளாசி அரைசதம் அடித்து ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 144 ரன்கள் அடிக்க உதவினார். ரியான் பராக் 31 பந்தில் 56 ரன்கள் அடித்தார். 

இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை களமிறங்கியது. இந்த சீசன் மூழுவதும் மோசமான ஃபார்மில் இருந்துவரும் விராட் கோலி இப்போட்டியிலாவது தனது பழைய ஃபார்மை கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போட்டியிலும் 9 ரன்களில் விராட் கோலி விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றத்தையே தந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற கேப்டன் டூ பிளெசிஸ் 23 ரன்னிலும், கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்திலும் விக்கெட்டை இழந்தனர்.

அதன்பின்னர் ராஜத் படித்தர் 23, ஷபாஸ் அஹ்மத் 17, பிரபுதேஷாய் 2, தினேஷ் கார்த்திக் 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஆர்சிபியின் தோல்வியும் உறுதியானது. இறுதியில் அதிரடியாக விளையாட முயன்ற ஹசரங்காவும் 18 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார்.

இதனால் 19.3 ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை