பிரப்ஷிம்ரன், ரியான் பராக் அதிரடியில் தொடரை வென்றது இந்திய ஏ அணி!

Updated: Sun, Oct 05 2025 22:17 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து அதிகாரப்பூர்வமற்ற கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்றது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணியும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணியும் வெற்றியைப் பதிவு செய்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலையில் வைத்திருந்தனர். இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கான்பூரில் உள்ள க்ரீன் பர்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 5 ரன்னிலும், மெக்கன்சி ஹென்றி 7 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கூப்பர் கனொலி சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், லியாம் ஸ்காட் - கேப்டன் ஜேக் எட்வர்ட்ஸ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதங்களைப் பதிவு செய்தும் அசத்தினர். 

இதில் லியாம் ஸ்காட் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 73 ரன்களையும், ஜேக் எட்வர்ட்ஸ் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 89 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய ஏ அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 317 ரன்களைச் சேர்த்தது. இந்திய ஏ அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய ஏ அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பிரப்ஷிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.

அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய அபிஷேக் சர்மா 22 ரன்களையும், திலக் வர்மா 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழக்க, பிரப்ஷிம்ரன் சிங் தனது சதத்தைப் பதிவு செய்து மிரட்டினார். பின்னர் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 102 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - ரியான் பராக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்னிலும், ரியான் பராக் 62 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் களமிறங்கிய ஆயுஷ் பதோனி 21 ரன்களையும், இறுதிவரை களத்தில் இருந்த விப்ராஜ் நிகாம் 24  ரன்களையும் சேர்க்க இந்திய ஏ அணி 46 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய ஏ அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் ஆட்டநாயகனாக பிரப்ஷிம்ரன் சிங்கும், தொடர் நாயகன் விருதை ரியான் பராக்கும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை