ஐபிஎல் 2022: ஆர்சிபி எடுத்தது துணிச்சலான முடிவு - சுனில் கவாஸ்கர்!
ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த ஐபிஎல் சீசன் முடிந்ததுமே, ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட் கோலி. 2013ஆம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட்கோலி, ஒருமுறை கூட ஐபிஎல் டைட்டிலை வெல்லவில்லை. அதுவே அவர் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி பெரிய ஸ்கோர் எதுவும் செய்யாத நிலையில், பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக இந்திய அணியின் கேப்டன்சி, ஆர்சிபி கேப்டன்சி என அவர் வகித்த அனைத்து கேப்டன்சியிலிருந்தும் விலகினார். ஐபிஎல் 15ஆவது சீசனிலிருந்து ஆர்சிபி அணியில் விராட் கோலி ஒரு சாதாரண வீரராக ஆடவுள்ளார்.
அடுத்ததாக ஆர்சிபி அணி யாரை கேப்டனாக நியமிக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்துவந்தது. இந்நிலையில், ஏலத்தில் ரூ.7 கோடிக்கு எடுத்த தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸை கேப்டனாக நியமித்தது.
தென் ஆப்பிரிக்க அணி கேப்டனாக நல்ல அனுபவம் கொண்டவர் ஃபாஃப் டுப்ளெசிஸ். டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல்லிலும் நீண்டநெடிய அனுபவம் கொண்டவர் டுப்ளெசிஸ். அந்தவகையில், அனுபவம் வாய்ந்த ஃபாஃப் டுப்ளெசிஸை கேப்டனாக நியமித்திருப்பது ஆர்சிபி அணிக்கு அனுகூலமான விஷயமாகத்தான் அமையும்.
இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், “கேப்டன்சியில் நல்ல அனுபவம் கொண்டவர் ஃபாஃப் டு பிளெசிஸ். சிறந்த தலைமைத்துவ பண்புகளை கொண்டவர். அவரை கேப்டனாக நியமித்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சிக்கலில் இருந்தபோது, கேப்டனாக பொறுப்பேற்று, அணியை ஒருங்கிணைத்து அடுத்தகட்டத்திற்கு அழைத்துச்சென்றவர் டு பிளெசிஸ். அவரை கேப்டனாக நியமித்தது ஆர்சிபி அணி எடுத்த துணிச்சலான முடிவு” என்று தெரிவித்துள்ளார்.