எம்எல்சி 2025: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வாஷிங்டன் ஃப்ரீடம்!
MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசனுக்கான இறுதிப்போட்டிக்கு நடப்பு சாம்பியன் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி முன்னேறி அசத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற இருந்த முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருந்த கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த இருந்தன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின்னரும் மழை தொடர்ந்த காரணத்தினால் இப்போட்டியானது டாஸ் வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வாஷிங்டன் ஃப்ரீடம் அணியானது இறுதிப்போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.
ஏனெனில் நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகளின் முடிவில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியானது விளையாடிய 10 போட்டிகளில் 8 வெற்றி 2 தோல்விகள் என மொத்தமாக 16 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்திருந்தது . அதேசமயம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்விகளைச் சந்தித்து இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. இதன் காரணமாகவே வாஷிங்டன் ஃப்ரீடம் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.
Also Read: LIVE Cricket Score
மேற்கொண்டு டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது சேலஞ்சர் சுற்றில் விளையாடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எலிமினேட்டர் சுற்றில் வெற்றிபெறும் அணியுடன் சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தும். இந்த சீசன் எலிமினேட்டர் சுற்றில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி இன்று நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.