எம்எல்சி 2025: டு பிளெசிஸ், மில்னே அபாரம்; ஆர்காஸை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!

Updated: Sun, Jul 06 2025 12:52 IST
Image Source: Google

எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் சியாட்டில் ஆர்காஸ் அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பானது கேள்விக்குறியாகியுள்ளது. 

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் சமித் படேல் 18 ரன்களுக்கும், சாய்தேஜா முக்காமல்லா ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் டூ பிளெசிஸ் மற்றும் ஷுபம் ரஞ்சனே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

இதில் அதிரடியாக விளையாடிய இருவரும் தஙகளின் அரைசதங்களை பூர்த்தி செய்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஃபாஃப் டூ ப்ளெசிஸ் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 91 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்ப, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஞ்சனே 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 65 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களைக் குவித்தது. 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்காஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் டேவிட் வார்னர் 8 ரன்னிலும், ஷயான் ஜகாங்கீர் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, கைல் மேயர்ஸும் 35 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் ஆரோன் ஜோன்ஸ் 14 ரன்களுக்கும், ஷிம்ரான் ஹெட்மையர் 26 ரன்களுக்கும், ஹென்ரிச் கிளாசென் 3 ரன்களுக்கும், கேப்டன் சிக்கந்தர் ரஸா 23 ரன்களுக்கும், ஹர்மீத் சிங் 15 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற அந்த அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆடாம் மில்னே 5 விக்கெட்டுகளையும், நூர் அஹ்மத், அகீல் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த தோல்வியின் மூலம் சியாட்டில் ஆர்காஸ் அணியின் பிளே ஆஃப் கனவும் கேள்விக்குறியாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை