ஐபிஎல் 2023: நொடிக்கு நொடி ட்விஸ்ட்; ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் த்ரில் வெற்றி!

Updated: Sun, May 07 2023 23:16 IST
IPL 2023: Abdul Samad hit Six to win the game for Hyderabad on the last ball! (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்று வரும் 16ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் 52ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் விக்கெட்டிற்கு 54 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர் இருவரும். இளம் வீரர் ஜெய்ஸ்வால் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், பட்லருடன் பலமான கூட்டணி அமைத்தார். 

இருவரும் 138 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பட்லர், 59 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து வெளியேறினார். 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். அதே நேரத்தில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன், 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன்மூலம்  20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - அன்மோல்ப்ரீத் சிங் இணை களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 51 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் 33 ரன்கள்ச் சேர்த்திருந்த அன்மோல்ப்ரீத் சிங் சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் அபிஷேக் சர்மாவுடன் ஜோடி செர்ந்த ராகுல் திரிபாதியும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா அரைசதம் கடந்த கையோடு 55 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி ராஜஸ்தான் அணிக்கு பயத்தைக் காண்பித்தார். 

பின் 26 ரன்களில் கிளாசெனும், 47 ரன்களில் ராகுல் திரிபாதியையும் வெளியேற்றியே யுஷ்வேந்திர சஹால், ஐடன் மார்க்ரமையும் 6 ரன்களில் வீழ்த்தி ராஜஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்தார். அதன்பின் கடைசி இரண்டு ஓவர்களில் ஹைதராபாத் அணி வெற்றிக்கு 41 ரன்களை தேவை என்ற நிலை ஏற்பட்டது.

இதில் ராஜஸ்தான் அணி தரப்பில் 19ஆவது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் பந்துவீச்சை எதிர்கொண்ட கிளென் பிலீப்ஸ் அடுத்தடுத்து 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 22 ரன்களைச் சேர்த்த கையோடு, அடுத்த பந்தையும் அடிக்க முயன்றார். ஆனால் அது போதிய தூரம் செல்லாததால் ஷிம்ரான் ஹெட்மையரிடம் தஞ்சமடைந்தது. இதனால் ஹைதராபாத் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட கிளென் பிலீப்ஸும் 25 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 

இதையடுத்து கடைசி ஓவரில் ஹைதராபாத் வெற்றிக்கு 17 ரன்கள் தேவை என்ற நிலையில் , ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா பந்துவீசினார். அந்த ஓவரில் அப்துல் சமாத் ஒரு சிக்சர், 2 இரண்டு ரன்களைச் சேர்க்க, மார்கோ யான்சன் ஒரு சிக்கிளையும் எடுத்தார். இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், அப்துல் சமாத் அதனை சிக்சர் அடிக்க முயற்சிக்க அது பட்லரிடம் கேட்ச்சானது. இதனால் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது என நினைத்த தருவாயில் அது நோபால் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து கடைசிப் பந்தில் 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் அப்துல் சமாத் அதனை சிக்சருக்கு அனுப்பி ஹைதராபாத் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்தது.   

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை