ஐபிஎல் 2022: பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்த உரிமையாளர்கள்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைவதால் இந்த சீசன் முதல் 10 அணிகள் ஆடவுள்ளன. எனவே இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.
மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12-13 தேதிகளில் பெங்களூருவில் நடக்கவுள்ளது. ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என்று ஐபிஎல் அணி உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.
நேற்று ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ ஆலோசனைக்கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டத்தில் ஐபிஎல்லை நடத்துவது குறித்த பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அப்போது ஐபிஎல் 15ஆவது சீசனை இந்தியாவிலேயே நடத்துமாறு அணி உரிமையாளர்கள் பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்தனர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 சீசன்கள் இந்தியாவில் நடக்கவில்லை. 2020ஆம் ஆண்டு நடந்த 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. 2021ஆம் ஆண்டு 14வது சீசனின் முதல் பாதி இந்தியாவிலும், பிற்பாதி அமீரகத்திலும் நடத்தப்பட்டது.
இந்த ஆண்டும் ஐபிஎல் தொடங்கும் சமயத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால் இந்தியாவில் நடத்துவது சந்தேகமாகியுள்ளது. எனவே தென் ஆப்பிரிக்கா அல்லது இலங்கையில் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் தான், அணி உரிமையாளர்கள் பிசிசிஐயிடம் ஐபிஎல் 15ஆவது சீசனை இந்தியாவிலேயே நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணி உரிமையாளர்களின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்கிறதா என்று பார்ப்போம். அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு தான் பிசிசிஐ முடிவெடுக்கும்.