நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டியது அவசியம் - டேவிட் மில்லர்!

Updated: Wed, Oct 12 2022 13:42 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியானது முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்த நிலையில் அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்த தென் ஆப்பிரிக்க அணியானது அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை பெற்று தற்போது ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

அதன்படி நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 27.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்களை மட்டுமே குவித்தது.

பின்னர் 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து விளையாடிய இந்திய அணியானது 19.1 ஓவரிலேயே மூன்று விக்கெட்டை இழந்து 105 ரன்கள் குவித்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றிருந்தது. 

இந்நிலையில் தோல்விக்கு பின் பேசிய டேவிட் மில்லர், “இந்த போட்டியில் நாங்கள் தோற்றது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த மைதானத்தில் 99 ரன்கள் மட்டுமே குவித்தது எங்களுக்கு உதவவில்லை. இந்த போட்டியின் முடிவில் நாங்கள் மிகவும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளோம். இந்த தொடரை நாங்கள் தோல்வியுடன் முடித்தது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.

இந்த மைதானத்தில் கொஞ்சம் டர்ன் அதிகம் இருந்தது. அதோடு மைதானம் கொஞ்சம் மெதுவாகவும், தாழ்வாகவும் இருந்தது. ஏற்கனவே இந்த மைதானத்தில் மழை பெய்து ஆடுகளம் மூடி வைக்கப்பட்டதால் முதலில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டியது அவசியம்.

ஆனால் இன்றைய போட்டியில் அது எங்களால் முடியாமல் போனது. ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை இந்த ஃபார்மட்டிற்கு ஏற்றார் போன்று நம்மை தகவமைத்து ஆடுவது முக்கியம். ஆனால் இந்த தொடரில் நாங்கள் அதனை செய்ய தவறி விட்டோம்” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை