இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய டேவிட் மில்லர்; தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு!

Updated: Tue, Sep 09 2025 19:28 IST
Image Source: Google

David Miller Ruled Out England T20 Series: இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை முதல் நடைபெற இருக்கும் நிலையில், நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும்  தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் டி20 தொடருக்கு முன்பு, தென் ஆப்பிரிக்க அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நீண்ட காலமாக அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். தி ஹண்ட்ரட் 2025 தொடரில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடும்போது மில்லர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 

அவருக்கு வலது தொடை பகுதியில் கயம் ஏற்பட்டதை அடுத்து, அதற்காக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனால் அவரால் சரியான நேரத்தில் முழு உடற்தகுதியை எட்ட முடியவில்லை. இதன் காரணமாக அவர் இந்த தொடரிலிருந்தும் வெளியேற வேண்டியிருந்தது. காயம் காரணமாக மில்லர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை என்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

முன்னதாக ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரையும் டேவிட் மில்லர் தவறவிட்டார். இதனால் அடுத்து நடைபெற இருக்கும் பாகிஸ்தான் தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளது. ஏனெனில் அணியின் மிக முக்கிய ஃபினிஷராக செயல்பட்டு வரும் டேவிட் மில்லர், காயம் காரணமாக அடுத்தடுத்த தொடர்களில் இருந்து விலகுவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இதுதவிர, இங்கிலாந்து தொடருக்கான பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் ஆல்ரவுண்டர் ஆல்பி மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 10 ஆம் தேதி கார்டிஃபில் இருந்து தொடங்கும். இரண்டாவது போட்டி மான்செஸ்டரிலும், கடைசி போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜிலும் நடைபெறும்.

தென் ஆப்பிரிக்க டி20 அணி: ஐடன் மார்க்ராம் (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரீவிஸ், டோனோவன் ஃபெரீரா, மார்கோ ஜான்சன், கேஷவ் மகாராஜ், குவேனா மஃபாகா, செனுரான் முத்துசாமி, லுங்கி இங்கிடி, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் லிசார்ட் வில்லியம்ஸ்.

Also Read: LIVE Cricket Score


 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை