எல்எல்சி 2022: கெவின் ஓ பிரைன் அதிரடி; இந்திய மஹாராஜஸ்க்கு 171 டார்கெட்!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் சிறப்பு போட்டி இன்று கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் ஹர்பஜன் சிங் தலைமையிலான இந்தியா மஹாராஜஸ் அணியும், ஜாக்ஸ் காலிஸ் தலைமையிலான உலக ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற உலக ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணிக்கு கெவின் ஓ பிரையன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார்.
அவருக்கு துணையாக விளையாடி வந்த ஹேமில்டன் மஸகட்ஸா 18 ரன்களிலும், கேப்டன் ஜாக்ஸ் காலிஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடி வந்த கெவின் ஓ பிரையன் அரைசதம் கடந்து அசத்தினார்.
பின்னர் 52 ரன்களில் கெவின் ஓ பிரையனும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய திசாரா பெராரே 23 ரன்களிலும், டைபு 7 ரன்களோடும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் கடைசி வரை களத்தில் இருந்த தினேஷ் ராம்டின் 42 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் உலக ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் பங்கஜ் சிங் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.