எல்எல்சி 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய கெவொன் கூப்ப் - வைரல் காணொளி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தபட்டு வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா மற்றும் குஜராத் கிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் கிரேட்ஸ் அணியானது கிறிஸ் கெயில் மற்றும் பிரசன்னா ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 34 ரன்களையும், பிரசன்னா 31 ரன்களையும் சேர்த்தனர். கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கெவொன் கூப்பர் ஹாட்ரிக் விக்கெட்டுகளுடன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கோனார்க் சூர்யாஸ் அணிக்கு ரிச்சர்ட் லீவி - தில்ஷன் முனவீரா இணை தொடக்கம் கொடுத்தனார். பின் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிச்சர்ட் லீவி தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தில்ஷன் முன வீராவும் 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய கெவின் ஓ பிரையன் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கெவின் ஓ பிரையன் 43 ரன்களையும், கேப்டன் இர்ஃபான் பதான் 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கோனார் சூர்யாஸ் ஒடிசா அணியானது 15 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் கிரேட்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இப்போட்டியில் கோனார் சூர்யாஸ் ஒடிசா அணிக்காக விளையாடிய கெவோன் கூப்பர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி இன்னிங்ஸின் 11ஆவது ஓவரை வீசிய கூப்பர், அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் கிறிஸ் கெயில், முகமது கைஃப், யாஷ்பால் சிங் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், கடைசி பந்தில் ஷிகர் தவானி விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்நிலையில் கூப்பர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.