தோனியிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம் இதுதான் - மஹீஷ் தீக்‌ஷனா!

Updated: Sun, Aug 20 2023 16:14 IST
Image Source: Google

இலங்கை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷனா. சிஎஸ்கே அணிக்காக 22 போட்டிகளில் விளையாடிய அவர், இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். கடந்த ஐபிஎல் சீசனில் தாமதமாக வந்தாலும், உடனடியாக சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார் மஹீஷ் தீக்‌ஷனா.

அதிலும் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான மிட்செல் சான்ட்னருக்கு பதிலாக மஹீஷ் தீக்‌ஷனா  சேர்க்கப்பட்டார். இதற்கு பவர் பிளே ஓவர்களில் தீக்ஷனாவின் தாக்கமே காரணமாக அமைந்தது.உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யாராக இருந்தாலும், தீக்ஷனாவின் பவர் பிளேகளுக்கு திணறும் வகையில் பந்துவீசி வருகிறார்.

அந்த வகையில் ஆசியக் கோப்பைத் தொடரில் மகீஷ் தீக்ஷனா சொந்த மண்ணில் களமிறங்குவதால் அபாயகரமான வீரராக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடர் மூலமாக கிடைத்த அனுபவங்கள் குறித்து இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் தீக்ஷனா பகிர்ந்துள்ளார்.

அதில், “உலகக்கோப்பைத் தொடர் நெருங்கி வரும் சூழலில் இலங்கை வீரர்கள் அனைவருக்கும் ஐபிஎல் அனுபவம் போதுமான அளவிற்கு கிடைத்துவிட்டது என்று நினைக்கிறேன். எனக்கு லக்னோ மற்றும் டெல்லி மைதானங்கள் அனுபவங்கள் இருக்கிறது. அதேபோல் எங்கள் கேப்டன் ஷனாவிற்கு அகமதாபாத் மைதானங்களில் விளையாடிய அனுபவமும், வனிந்து ஹசரங்காவிற்கு பெங்களூர் மைதானங்களில் விளையாடிய அனுபவமும் அதிகளவு இருக்கிறது. இதனால் வரும் உலகக்கோப்பைத் தொடரில் எந்த மைதானங்களில் எப்படி பந்துவீச வேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.

சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் தோனியின் தலைமையின் கீழ் விளையாடியது என்றுமே மறக்க முடியாத அனுபவம். அவரின் அணுகுமுறையும், ஆலோசனையும் அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் பயனுள்ளதாக அமையும். அவ்வளவு பிரஷரான சூழலிலும் அவர் கட்டுப்பாடாக இருந்து வெற்றியை பெறுவது ஆச்சரியமானது. அதுதான் தோனியிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::