ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்துக்கு இப்படி ஓர் நிலையை எட்டியுள்ளதா? - கவாஸ்கர் வியப்பு!
2023-2027 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் என இரண்டும் சேர்த்து ரூ.44,070 கோடி ரூபாய்க்கு ஏலம் போகியுள்ளது. இது 2018-2022 வரையிலான ஐந்து ஆண்டு தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலத்தில் பிரத்யேக போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமம் மற்றும் வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமம் என இரண்டு பிரிவுகளுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த ஐந்து ஆண்டுகளில் 410 போட்டிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு போட்டிக்குமான ஒளிபரப்பு உரிமம் என்பது ரூ.100 கோடிக்கு மேல் உள்ளது. இது டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை அடக்கியது.
இந்நிலையில் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் இப்படி ஓர் உயரிய நிலையை எட்டும் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் இப்படி ஒரு நிலையை எட்டும் என முதல் சீசனின்போது நான் நினைக்கவில்லை. இது மிகவும் அற்புதமான ஒன்று. தரமான கவரேஜ், அதனை விரும்பிய மக்கள் என இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகள். பிசிசிஐ-க்கு எனது வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.