NZ vs ENG 1st,test: கான்வே அதிரடியில் வலிமையான் நிலையில் நியூசிலாந்து; பந்துவீச்சில் அசத்திய இங்கிலாந்து!
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டேவன் கான்வே அறிமுக வீரராக களமிறங்கினார். அவருடன் டாம் லேதம் வீரராக களம் இறங்கினார்.சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டாம் லேதம், ஒல்லி ராபின்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
பின் களமிறங்கிய அனுபவ வீரர் ராஸ் டெய்லர் 14 ரன்னில் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அறிமுக வீரர் டேவன் கான்வே அபாரமாக விளையாடி 163 பந்தில் 11 பவுண்டரியுடன் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதத்தை பதிவு செய்தார்.
மேலும் லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக போட்டியில் சதமடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும், நியூசிலாந்து சார்பில் முதல் வீரர் என்ற சாதனையையும் டேவன் கான்வே படைத்தார்.
அவருடன் இணைந்து விளையாடிய ஹென்றி நிக்கோலஸும் தனது பங்கிற்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சை சமாளித்தார்.
இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களைக் குவித்துள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் டேவன் கான்வே 136 ரன்களுடனும், ஹென்றி நிக்கோலஸ் 46 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஒல்லி ராபின்சன் இரண்டு விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.