தோனி இடத்தை தினேஷ் கார்த்திக் நிரப்புவார் - ரவி சாஸ்திரி
சமீபத்தில் நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் அனைவருக்கும் வியக்குமளவிற்கு தரமான கம்பேக் கொடுத்திருந்தார் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக். 6ஆவது, 7ஆவது வீரராக களமிறங்கிய அவர் 16 போட்டிகளில் 330 ரன்களை விளாசினார். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் தோனியின் ஃபினிஷர் இடத்தில் தினேஷ் கார்த்திக்கை களமிறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் நான் உடன்படுகிறேன். ஆனால், அணியின் தேவைதான் மிகவும் முக்கியம்.
அதற்கு முன்னுரிமை கொடுத்துதான் அணியை தேர்வு செய்ய வேண்டும். தோனி இல்லாததால் ஃபினிஷர் பற்றாக்குறை அணியில் இருக்கிறது. அணியின் பார்வையில் இருந்து நீங்கள் பார்க்க வேண்டும். தேர்வுக்குழுவினர் எதைத் தேடுகிறார்கள்? வரிசையில் முதலிடத்தில் பேட் செய்யும் கீப்பர் வேண்டுமா அல்லது ஃபினிஷராக இருக்கும் கீப்பர் வேண்டுமா? என்னைக் கேட்டால் நான் இரண்டாவதைதான் வேண்டும் என்பேன். இது தினேஷ் கார்த்திக்கிற்கு அருமையான வாய்ப்பு.
டி20 கிரிக்கெட்டில் முதல் நான்கு அல்லது ஐந்தாம் இடத்தில் பேட் செய்யக்கூடிய ரிஷப் பந்த் ஏற்கனவே இருக்கிறார். எனவே எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக், தோனியின் ஃபினிஷர் இடத்தில் களமிறக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.