இவர் இருந்திருந்தால் நாங்கள் அரையிறுதியில் தோற்றிருக்க மாட்டோம் - ரவி சாஸ்திரி!
மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கான மூன்று வடிவ கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொண்ட பிறகு, இந்திய அணிக்கு முழு நேர கேப்டனாக விராட் கோலி பொறுப்பு ஏற்று, முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரைச் சந்தித்தார். இந்த இந்திய அணியில் மேல் வரிசை ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி என்று பலமாக இருக்க, கீழே லோயர் மிடில் ஆர்டரில் நம்பிக்கை தரும் விதமாக மூத்த பேட்ஸ்மேன் கிரேட் பினிஷர் மகேந்திர சிங் தோனி இருந்தார்.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இருவரும் இருந்தார்கள். அதேவேளையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுப்படையில் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமத் சமி இருந்தார்கள். சுழற் பந்துவீச்சுக்கு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் சாகல் மற்றும் குல்தீப் இருந்தார்கள். இந்த வகையில் இந்திய அணி பலமான அணியாக இந்தத் தொடரில் கணிக்கப்பட்டது.
எதிர்பார்த்தது போலவே லீக் சுற்றில் மிகப் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரையறுதியில் நான்காம் இடத்தை பிடித்த நியூஸிலாந்து அணியை சந்தித்தது. 240 ரன்களை துரத்திய இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் எதிர்பாராத அதிர்ச்சி தோல்வி அடைந்து அந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. அந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே காலில் ஏற்பட்ட காயத்தால் ஷிகர் தவான் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது 2019 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் குறித்து அப்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசும்போது “ஷிகர் தவான் மிகச் சிறப்பான அற்புதமான வீரர். ஆனால் அவரது திறமைக்கு தகுந்த அங்கீகாரத்தை மக்கள் அவருக்கு வழங்கவே இல்லை. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நாங்கள் அரைஇறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோற்றோம். அந்தத் தொடரில் அவர் எங்களுக்கு கிடைக்காமல் போனார். டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருக்கும் பொழுது, அது மற்ற மூன்று வலது கை பேட்ஸ்மேன்களை விட, பந்து வெளியே ஸ்விங் ஆகி செல்லும் பொழுது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது.
இந்தியா அணிக்கு தற்பொழுது டாப் ஆர்டர், மிடில் மற்றும் லோயர் மிடில் ஆர்டரில் மூன்று இடது கை பேட்ஸ்மேன்கள் தேவையாக இருக்கிறது. இந்தியத் தேர்வாளர்களுக்கு இந்த இடத்தில்தான் முக்கிய வேலை இருக்கிறது. எந்த இடது கை பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான முறையில் பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களை தைரியமாக அணி கொண்டு வர வேண்டிய பொறுப்பு தேர்வாளர்களுக்கு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.