SA vs AUS, 1st ODI: அணியை சரீவிலிருந்து மீட்ட பவுமா; ஆஸ்திரேலியாவுக்கு 223 டார்கெட்!

Updated: Thu, Sep 07 2023 20:16 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ப்ளூம்ஃபோன்டைனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி குயின்டன் டி காக் - டெம்பா பவுமா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி காக் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டூசென் 8 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் 19 ரன்களிலும், ஹென்ரிச் கிளாசென் 14 ரன்களிலும், டேவிட் மில்லர் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இருப்பினும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் டெம்பா பவுமா அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு துணையாக மார்கோ ஜான்செனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்கோ ஜான்சென் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தார். 

அதனைத்தொடர்ந்து வந்த ஜெரால்ட் கோட்ஸி 2, கேசவ் மகாராஜ் 2, காகிசோ ரபாடா ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் டெம்பா பவுமா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெம்பா பவுமா 114 ரன்களை எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை