SAvsPAK: ஃபகர் ஸமான் அதிரடியில் தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்!
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் சதமடித்தும், பாபர் அசாம், இமாம் உல் ஹக் ஆகியோர் அரைசதமடித்தும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 321 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியில் மாலன், வெர்ரெய்ன், பெஹ்லுக்வாயோ ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சரிவர சோபிக்காததால், 49.3 ஓவர்களில் 292 ரன்களை மட்டும் எடுத்து தென்ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபகர் ஸமான் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.