டி20 உலகக்கோப்பை: பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று ஆருடம் தெரிவித்துவருகின்றனர்.
இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடிவருகின்றன. எனவே டி20 உலக கோப்பையை வெல்ல போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டெம்பா பவுமா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ராஸ்ஸி வாண்டர் டுசென் காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் ஆடவில்லை.
இது தென்னாப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். அவருக்கு பதிலாக இளம் வீரரான டிரிஸ்டான் ஸ்டப்ஸ் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசன், கேஷவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, அன்ரிக் நோர்க்யா, வெய்ன் பார்னெல், ட்வைன் ப்ரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ரிலீ ரூசோ, டப்ரைஸ் ஷம்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.
கூடுதல் வீரர்கள் - ஃபார்ச்சூன், மார்கோ யான்சென், ஆண்டில் ஃபெலுக்வாயோ.