AUS vs SA, 1st ODI: கேஷவ் மஹாராஜ் சுழலில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா!
AUS vs SA, 1st ODI: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் கேஷவ் மஹாராஜ் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதுடன், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியில் உதவினார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது.இதையடுத்து ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் இன்று கெய்ர்ன்ஸில் உள்ள கசாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் - ரியான் ரிக்கெல்டன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் மார்க்ரம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ரிக்கெல்டன் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து சதத்தை நெருங்கிய ஐடன் மார்க்ரமும் 9 பவுண்டர்களுடன் 82 ரன்களை எடுத்த கையோடு ஆட்டமிழது பெவிலியனுக்கு திரும்பினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் டெம்பா பவுமா மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கி இணையும் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன், தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்தனர். அதன்பின் பிரீட்ஸ்கி 57 ரன்களிலும், கேப்டன் பவுமா 65 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் வியான் முல்டர் 31 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஷ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 27ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் க்ரீன், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, ஆரோன் ஹார்டி உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 89 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் அரைசதம் கடந்தார்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் 88 ரன்களை எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் பென் துவார்ஷுயிஸ் 33 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்களில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கேசவ் மஹாராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.