சையித் முஷ்டாக் அலி: சண்டிகரை வீழ்த்தியது தமிழ்நாடு!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையித் முஷ்டாக் அலி கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று லக்னெளவில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு - சண்டிகர் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் அஜிதேஷ் ஒரு ரன்னுடனும், ஹரி நிஷாந்த் 26 ரன்னுடனும் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் பாபா அபாரஜித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் சரிவர சோபிக்க வில்லை.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அபாரஜித் 67 ரன்களைச் சேர்த்தார். சண்டிகர் தரப்பில் சந்தீப் சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய சண்டிகர் அணியில் மானன் வோரா, ஹர்னூர் சிங், ஷிவம் பாம்ரி, அன்கித் கௌசிக் என அனைவரும் தமிழ்நாடு அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய லதர் ஒருமுனையில் நிதானமாக நிற்க, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லதர் 38 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே எடுத்தது. தமிழக அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர், நடராஜன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.