எங்களது பீல்டிங் மோசமாக அமைந்தது - ஆரோன் ஃபிஞ்ச்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை அணி. பல்லேகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 47.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார்.
மழை காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு 43 ஓவர்களில் 216 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் என்கிற நல்ல நிலைமையில் இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் நெருக்கடி அளித்தார்கள்.
கடைசியில் 37.1 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் (டி/எல் முறையில்) தோல்வியடைந்தது ஆஸ்திரேலிய அணி. கடைசி 5 விக்கெட்டுகளை 19 ரன்களுக்கு இழந்ததால் இந்த நிலை ஏற்பட்டது.
கடந்த 1998-க்குப் பிறகு இப்போது தான் இலக்கை விரட்டும்போது குறைந்த ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. சமிகா கருணாரத்னே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டி முடிவுக்கு பின் தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், “இப்போட்டியில் எங்களது பீல்டிங் சுமாராகத் தான் இருந்தது. நாங்கள் நன்றாக பீல்டிங் செய்திருந்தால் 20, 30 ரன்களைக் குறைத்திருக்கலாம்.
இதுபோன்ற மைதானங்களில் நாங்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டியது அவசியம். ஆனால் இப்போட்டியில் நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டோம். அதுவே எங்களது தோல்விக்கு காரணமாக மாறியது” என்று தெரிவித்தார்.