பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து!
டி20 உலகக்கோப்பை தொடரி எட்டாவது சீசன் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றிருக்கும் இத்தொடரில் தற்போது, தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதேசமயம் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிப்பெற்றுள்ள 8 அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு காயத்திலிருந்து மீண்ட ஷாஹீன் அஃப்ரிடி மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தி கதிகலங்க வைத்தார். அதன் காரணமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன் ஏதுமின்றியும், ஹஸ்ரதுல்லா ஸஸாய் 9 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதன்பின் வந்த நஜிபுல்லா ஸத்ரான், ரசூலி ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஆஃப்கானிஸ்தான் அணி 100 ரன்களை தாண்டுமா என்ற கேள்வி எழுந்தது. அதன்பின் ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - முகமது நபி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இப்ரஹிம் ஸத்ரான் 35 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி வரை அதிரடியாக விளையாடிய முகமது நபி 36 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எடுத்தது.
ஆஃப்கானிஸ்தான் தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் முகமது நபி 51 ரன்களைச் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை தொடக்கம் கொடுத்தனர். பின் இந்த இன்னிங்ஸில் 2.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து மழை நீடித்த காரணத்தினாலும், நேரமின்மை காரணமாகவும் இப்போட்டி அத்துடன் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் அணி வரும் 23ஆம் தேதி இந்திய அணிக்கெதிராக நேரடியாக உலகக்கோப்பை லீக் போட்டியில் மொதும் என்பது குறிப்பிடத்தக்கது.