டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில்  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் மெண்டிஸ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, பதும் நிஷங்காவும் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து குசால் பெரேரா 15 ரன்களுக்கும், கேப்டன் சரித் அசலங்க 20 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் ஒருபக்கம் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய தசுன் ஷன்கா ரன்கள் ஏதுமின்றியும், வநிந்து ஹரங்கா 15 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் கமிந்து மெண்டிஸ் தனது அரைசத்தத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

Advertisement

பின்னர் 50 ரன்களுடன் மெண்டி நடையைக் கட்ட, இறுதிவரை களத்தில் இருந்த சமிகா கருணரத்னே 17 ரன்களைச் சேர்த்திருந்தார். இதன் காரணமாக இலங்கை அணி 20 ஓவார்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராவுஃப், ஹுசைன் தாலத் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சாஹிப்சாதா ஃபர்ஹான் - ஃபகர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் ஃபகர் ஸமான் 17 ரன்களுக்கும், ஃபர்ஹான் 24 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து வந்த சைம் அயுப் 2, கேப்டன் சல்மான் ஆகா 5, முகமது ஹாரிஸ் 13 என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஹுசைன் தாலத் - முகமது நவாஸ் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில் ஆர்வம் காட்டினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹுசைன் தாலத் 33 ரன்களையும், முகமது நவாஸ் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 38 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அதேசமயம் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ள இலங்கை அணி, ஏறத்தாழ தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News