உலகிலேயே ஒரே ஒரு மிஸ்டர் 360 பேட்ஸ்மேன் மட்டுமே உள்ளார் - சூர்யகுமார் தன்னடக்கம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்தது.
அதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 126 ரன்னில் சுருண்டது. ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் நீங்கள் தான் அடுத்த ஏபி டீ வில்லியர்ஸா? என்று நேற்றைய போட்டி முடிவில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எப்போதுமே நான் முதல் சூர்யகுமார் யாதவாக இருக்க விரும்புகிறேன் என்று அடக்கமாக பதிலளித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “உலகிலேயே ஒரே ஒரு மிஸ்டர் 360 பேட்ஸ்மேன் மட்டுமே உள்ளார். அவருக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை நான் பெறவில்லை. ஆனால் அவரிடம் நான் நிறைய பேசியுள்ளேன். மேலும் தற்போது செய்வதை தொடர விரும்பும் நான் அடுத்த சூர்யகுமார் யாதவாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்.
என்னைப் பற்றி வாழ்த்து செய்திகளும் ட்வீட்களும் வரும் போது நான் நல்லபடியாக உணர்கிறேன். ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கருடன் விளையாடிய போது நிறைய கற்றுக் கொண்டேன். தற்போது விராட் கோலியுடன் இணைந்து கற்றுக்கொண்டு விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் அனைத்து புறங்களிலும் அடிப்பதில் ரகசியம் ஒன்றுமில்லை. பயிற்சியில் என்ன நான் செய்கிறேனோ அதை மாற்றாமல் களத்தில் அதிரடியாக அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்கிறேன்.
அதுதான் முக்கியம். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் பொறுமையை பற்றி நினைக்காமல் அதிரடியாக விளையாட வேண்டும். அதில் எப்படி விளையாட வேண்டும் என்பதை பயிற்சி மற்றும் ஹோட்டல் அறையில் நினைக்க வேண்டுமே தவிர களத்தில் நினைக்க கூடாது. மேலும் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும். எப்பொதுமே தோற்று விடுவோம் என்ற பயத்தை நான் களத்திற்கு எடுத்து வருவதில்லை” என்று தெரிவித்தார்.