ஐபிஎல் 2022: அதிவேகப்புயல் உம்ரான் மாலிக்கை அதிகரிக்கும் ஆதரவு!
ஐபிஎல் தொடர் கடந்த 3 வாரங்களாக படு சுவாரஸ்யத்துடன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் தற்போது வரை 4 போட்டிகள் வரை விளையாடியுள்ளன.
நேற்று நடைபெற்ற 21ஆவது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து விளையாடிய ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்று அசுர பலத்தில் இருந்த குஜராத் அணி வீழ்த்தப்பட்டுள்ளது. ஆனால் அதனையெல்லாம் விட ஒரே ஒரு வீரர் மட்டும் தான் தற்போது பேசுப்பொருளாகியுள்ளார். அது ஹைதராபாத் அணி வேகப்புயல் உம்ரான் மாலிக் தான். நேற்றைய போட்டியில் புதிய உச்சமாக 153.3 கிமீ வேகத்தில் பந்துவீசி அசர வைத்துள்ளார்.
கிரிக்கெட்டில் தற்போது 140+ கிமீ வேகத்தில் பந்து வீசுவதற்கே வீரர்கள் தடுமாறுகின்றனர். ஆனால் உம்ரான் மாலிக், நான் வீசினால் 150+ கிமீ வேகம் தான் என ஒற்றை காலில் நிற்கிறார். இந்த சீசனில் டாப் 5 வேகமான பவுலிங் போட்டவர்களின் பட்டியலில் முழுவதுமே உம்ரான் மாலிக்கின் பெயர் தான் இடம்பெற்றுள்ளது. இவரிடம் உள்ள மற்றொரு சுவாரஸ்யம் ஸ்லோவர் பாலாக 110 கிமீ வரை பந்துவீசி வேரியேஷன்ஸ் காட்டுகிறார் என்பதுதான்.
இப்படி அட்டகாச திறமையை வைத்துள்ள உம்ரான் மாலிக்கிற்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே குரல் கொடுத்துள்ளது. உம்ரான் மாலிக் கூடிய விரைவில் இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டும். அவர் ஒரு சிறப்பு வாய்ந்த சொத்து எனக்கூறி வருகின்றனர்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், “உம்ரன் மாலிக்கை கவுண்டி கிரிக்கெட்டில் ஆட வைத்து பிசிசிஐ தயார் படுத்த வேண்டும்” எனக்கூறியுள்ளர்.
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலிய களத்தில் வேகப்பந்துவீச்சாளர்களின் கைகள் தான் ஓங்கியிருக்கும். எனவே அங்கு உம்ரான் மாலிக்கை பயன்படுத்த நிச்சயம் பிசிசிஐ திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.