பிஎஸ்எல் 2021: சதமடித்து மாஸ் காட்டிய கவாஜா; பெஸ்வர் அணிக்கு 248 ரன்கள் இலக்கு!
அபுதாபியில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 6ஆவது சீசனில் இன்று 26ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பெஸ்வர் ஸால்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பெஸ்வர் ஸால்மி அணி முதலில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா - காலின் முன்ரோ இணை களமிறங்கி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த காலின் முன்ரோ 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து வந்த ஆசிப் அலி - கவாஜாவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.
இதற்கிடையில் கவாஜா அரைசதம் கடந்தார். மறுமுனையிலிருந்த ஆசிப் அலி 14 பந்துகளில் 5 சிக்கர்கள், 2 பவுண்டரிகள் என எதிரணி பந்துவீச்சாளர்களை பதம் பார்த்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய பிராண்டன் கிங் தனது பங்கிற்கு சிக்சர்களையும், பவுண்டரிகளையும் பறக்க விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்தி வந்த உஸ்மான் கவாஜா 53 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களைச் சேர்த்தது. இதன் மூலம் பிஎஸ்எல் தொடரில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையையும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி படைத்துள்ளது.
இதில் உஸ்மான் கவாஜா 105 ரன்களுடனும், பிராண்டன் கிங் 46 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து பெஸ்வர் ஸால்மி அணி இமாலய இலக்கை நோக்கி களமிறங்கவுள்ளது.