விஜய் ஹசாரே கோப்பை: அபாரஜித், வாஷிங்டன் அதிரடியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தமிழ்நாடு!

Updated: Fri, Dec 24 2021 17:09 IST
Image Source: Google

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று தொடங்கின. இதில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா அணிகள் மோதின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சவுராஷ்டிரா அணி ஷெல்டன் ஜாக்சனின் அதிரடியான சதத்தினால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக ஷெல்டன் ஜாக்சன் 134 ரன்களைச் சேர்த்தார். தமிழ்நாடு அணி தரப்பில் விஜய் சங்கர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் இமாலய இலக்கை துரத்திய தமிழ்நாடு அணியில் ஜெகதீசன் ரன் ஏதுமின்றியும், விஜய் சங்கர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த பாபா அபாரஜித் - இந்திரஜித் சகோதரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் சகோதரர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 50 ரன்களில் இந்திரஜித் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபாரஜித் சதம் விளாசினார்.

பின் 122 ரன்களில் அபாரஜித் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 31 ரன்னிலும், ஷாருக் கான் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

இருப்பினும் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், அணியை வெற்றிக்கு அருகிலும் அழைத்துச் சென்றார். பின் 70 ரன்களில் வாஷிங்டனும் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இதனால் கடைசி ஓவரில் தமிழ்நாடு அணி வெற்றிபெற 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கைவசம் 2 விக்கெட்டுகளை மட்டுமே வைத்திருந்தது. இறுதில் தமிழ்நாடு அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பெற்றது.

இதன்மூலம் தமிழ்நாடு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணியை வீழ்த்தி, விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை